August 24, 2011

பாரதத் தாயே வணக்கம்!

(சந்தவசந்தக் குழுவில் சுதந்திரதினம் (2007 வருடம்) நான் எழுதிய பாடல்.)

அருமையான சுதந்திரத்தை அடைந்தவிதம் சொலப்போமோ?
ஒருமனதாய் இளைஞர்தம் ஊனுணர்வில் சுதந்திரமே
வருநாளின் நிச்சயமாம்,மாண்புதரும் விடுதலையே
கருமமென வேள்விதனில் தமையிழந்தார்!புகழ்பெற்றார்!

சிதைந்திடுதல் எண்ணாது செயலொன்றே குறியாக்கி
சுதந்திரமே மூச்செனவும் சொத்தெனவும் கொள்வதொன்றே
இதந்தருமாம்;கவிமொழியில் எடுத்துரைத்த பாரதியின்
பதந்தன்னைத் தொழுதுயர்த்திப் பாரேற்றப் புகழ்ந்திடுவோம்!

நூதனமாம் சாத்திரங்கள் நுவலுகின்ற நுட்பங்கள்
சாதனையாய் பெண்கல்வி சாதிக்கும் என்றுரைத்த
நீதிமன்னன் பாரதியின் நெஞ்சுநிறை வாக்குண்மை!
பேதமின்றி ஆண்பெண்ணும் பெற்றயிரு கண்ணன்றோ?

பாரதத்தாய் விலங்கவிழ்க்க பாரதிவான் முரசறைந்தான்!
வீரமிகு கவிமுழக்கி விடுதலைபெற் றோமென்றான்!
வேரதனில் நீரெனவும் வெல்லுகவி வண்மையினால்
நேரெதிரே சாவினையே நெஞ்சணைத்த வீரருண்டு!

சிறுமியென ஊர்வலத்தில் சென்றமுதல் சுதந்திரநாள்
உறுகின்ற உணர்வதனில் உத்வேகம் உண்டாச்சு!
பொறுப்புடைய அகிம்சையெனும் பொற்புடைய காந்திஜியால்
பெறுமிந்த சுதந்திரத்தில் பெருமிதமாய் நாடுயரும்!

துறவியரும் தியாகிகளும் தோன்றுமுயர் பாரதமாம்!
குறைவில்லா அறிவுவளம் குவிந்துள்ள நாடிதுவாம்!

மண்ணுள்ள நாள்மட்டும் மறவாமல் தீரர்புகழ்
பண்ணதனில் கவிதைதனில் வருமக்கள் உணரச்செய்வோம்!
கண்பனிக்க வந்தித்து கையுயர்த்தி வணங்கிடுவோம்!
விண்ணவரும் பூச்சொறிந்து வீரரையே வாழ்த்துவரே!


March 31, 2010

என்னால் முடியும்!

என்னால் முடியு மென உறுதியுடன் முயன்றிடுவாய்!
...ஏறுமுகம் நிச்சயம்!
சொன்னால் முடிவதில்லை செயலாற்ற முனையவரும்
...சோதனையை வென்றிடு!
முன்னால் பெரியவர்கள் சொல்லிவைத்த அனுபவங்கள்
...முற்றிலும்தான் உண்மையே!
பொன்னாய்ப் புடமிடவே பொற்பாகும் உயர்வினிலே
...போற்றிடவே வாழ்ந்திடு!

(சந்தவசந்தக் குழுமத்தில் சில வருடங்கள்
முன் இட்டது.கொஞ்சம் சரிசெய்து இட்டுள்ளேன்)

March 26, 2010

இறையே!எழிலே!

கழையும் தருவும் மழையும் கடலும் பொழிலும் இறையுன் எழிலார்க்கும்!
கழலின் கழலும் சுழல முழவ மதிரும் நடனம் விழிஈர்க்கும்!
குழையும் அசையும் தழையும் சடையும் இழைய இலங்கும் அழகோனே
உழையும் துடியும் அழலும் விளங்கு மழுவும் உடைய குழகோனே!

March 23, 2010

மங்கா ஒளியே!

(ஒன்று,மூன்று,ஐந்து, சீரெதுகைகள்.
அடியீற்றில் இயைபு வரத் தொடுத்தல்.)

கங்கா தரனே வெங்கா டுடையாய்!மங்கா ஒளியே!அருவானாய்
துங்கா! உமையாள் பங்கா! பவமே தங்கா தருளும் குருவானாய்!
பொங்கார் கழலின் சங்கார் ஒலியின் சங்கீ தநடம் உனதாகும்!
சங்கா ரசிவா! எங்கோ! உனது சிங்கா சனமென் மனமாகும்!

March 21, 2010

கோதிலானைப் பாடுவோம்!

6தேமா+கூவிளம்.

ஆதி யாய நாதி யான
...சோதி யானை நாடுவோம்!
நீதி வாழ பூதி தந்த
...கோதி லானைப் பாடுவோம்!
பாதி யான மாதின் நேயன்
...சோதித் தாளும் மெய்யனாம்!
வாதி டாமல் ஓதி யென்றும்
...போதிப் பாரின் ஐயனாம்!

March 18, 2010

வண்ணப் பாடல்!--- 2.

'தந்தனாத் தானத்..தனதான'

பிஞ்சகாத் தேடற்.. கரியோனே!
...பித்தனாய்ப் பாடற்.. கெளியோனே!
நஞ்சமாய்க் காணக் களமானாய்!
...நம்புவார்க் காகத்..துணையாவாய்!
வஞ்சமீக் கூரத்..தருமாயை
...மண்டிவாட் டாதக் கழலோனே!
தஞ்சமாய்த் தாளைப்..பணிவோரின்
...சங்கமாய்ச் சேரற்.. கருளாயே!

March 7, 2010

வண்ணப் பாடல்!

'தனதானத்..தனதான'

விடையேறிக்..கனிவோடு
...வினையோடப்..புரிவாயே!
சடையோடுப்..பொலிவாகும்
...தவமோனக்..குருநாதா!
மடைவாளைப்..பயிரோடும்
...வளமானத்..திருவூரா!
கடையேனுக்..கருளாயோ
...கடவூரில்..பெருமானே!

February 11, 2010

திருவடிநிழல் துணையதே !

விடையுடையவன் வியனுறுவிரி சடையுடையவன் மறிமழுப்
படையுடையவன் மயலதும்நைய வயமருள்பவன் மறையறை
நடையுடையவன் அடியரிதயம் இடமுடையவன் ஒளிமலர்த்
தொடையலணியும் நயமுடையவன் திருவடிநிழல் துணையதே !


வயம்=வெற்றி
நயம்=அனுகூலம் செய்பவன்,கண்ணோட்டமுடையவன்

February 10, 2010

திருமுறை தினம் உரை!

முனிசனமுறு சமனநிலையும் அவன்செயலென அறிகுவை
நனிகனிமனந் தனில்புனைஅடி யவர்திருமுறை தினமுரை
பனிமலைஅரன் சனனமரண வினைபொடிசெயும் கதியவன்
புனிதமவனின் பதமெனுமலர் இணைதனைதுதி அருள்வனே.

February 8, 2010

கழல் அருளுமே!

தணலுருவினன் குணங்குறியிலன் அணைந்தருள்செயும் சிவனவன்
கணமவனுரு உணர்வதிலுறு துணைதருமுயர் மணியவன்
பிணமெரிநிண மணசுடலையில் இணையிலிநடம் புரிகுவன்
ரணமிகுஇரு வினைமுரணழி இணைகழல்பிணை அருளுமே!

February 6, 2010

அடியவர் விழைவரே!

சுடர்விழிநுதல் கரமதில்மறி மழுப்படையழல் துலங்கிட
மிடல்மிகுகொடு புலியதளுடை இடைதவழ்பட அரவமும்
படர்சடைமுடி விடமிடறுடன் துடிஉடுக்கையும் ஒலி பட
தொடரடியவர் பொடியணிபவன் நடமிடுபதம் விழைவரே!

திருநடம் நினைமினே!

சுதியிதம்செயும் இசைதவழ்ந்திடும் துதிபதிகமும் இனிதுற
நிதியெனும்தயை மிகுந்தருளினில் விதிசிதைந்திடத் தொலைத்திடும்
கதியதுதரும் பதம்பதிந்திடும் மனதளமதும் நிறைவுறும்
மதிநதியணி திகழ்விரிசடை பதிதிருநடம் நினைம்மினே!

February 2, 2010

கருணையின் வடிவே!




கருணையின் வடிவாய்க் கனியும் தாய்முன்
...கரம்தவழ் குழந்தை யாகினேன்
அருளொளிக் குளிராய் அணைக்கும் பார்வை
...அளித்திடும் இதத்தைக் காண்கிறேன்!
தருமுயர் அபயம் சதமாய்ச் சாற்றும்
...தயைநிறை கரங்கள் தோன்றுதே!
திருவடி யிணையில் திளைக்கும் உள்ளம்
...சிவையெனும் உமையைப் போற்றுதே!


(சில வருடங்களுக்கு முன் சந்தவசந்தத்தில் நான் எழுதியது)

(கருவிளம் மா மா தேமா
கருவிளம் மா கூவிளம்)
(1-- 3-- 5 மோனை)

February 1, 2010

இறைவனேஅருள்செய்வான்!

குவைநிதிவளர் கவினிளமையும் சுவைதருவதும் எதுவரை?
இவைஅவையென தினம்வருந்திடும் விதம்திரிவதில் பயனிலை!
சிவையவள்பதி சிவகுருதவ நிலைநினைவுகொள்! மயலறும்!
நவையுறுபவ வினையழிவழி வகையருள்செயும் இறைவனே!

January 31, 2010

முறைசெயும் நம திறைவனே!

குறைபிறைஉறை விரிசடையொளிர் நறைமலர்ச்சரம் அணிபவன்
மறையறைகழல் தொழும்சிறுவனுக் கருளமறலி உதைத்தவன்!
கறைமிடறுடை நடமிடுசிவன் உறுநரினுளம் நிறைபவன்!
சிறைஉறுபவ வினையறும்படி முறைசெயும்நம திறைவனே!


சிறை=தளை
உறுநர்=அடியார்

January 29, 2010

சிலம்பொலிகழல் பணிவமே!

(கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளம்)

அலைகடலிலும் புலர்விடிவிலும் அலர்மலரிலும் உறைபவன்
கலைநிலவெழில் பொலிஅலைநதி துலங்கிடவருள் இறையவன்
நிலைகுலைவுற மயலிருள்வினை தொலைந்திடவரு கதிரவன்
சிலையழகுமை உளமிலங்குவன் சிலம்பொலிகழல் பணிவமே!


விடிவு= விடியல்

January 12, 2010

ஏன்?

(நவம்பர்,2007,சந்தவசந்தக் கவியரங்கம்'ஏன்?'என்னும் தலைப்பில்
நான் எழுதியது)

'ஏன்'எனும் சொல்லில்தான் எத்தனை வீச்சுகள்!
தானதில் முன்நின்று தரும்ரசங்கள் எத்தனையோ!

பள்ளிகொண்ட பெருமானைப் பாடலிலே கவிராயர்
துள்ளிவரும் வெள்ளமெனத் தொடுத்தகவி ஏனில்தான்!

சுந்தராம்பாள் தேனிசையில் சுழன்றுவரும் என்ன என்ன?
கந்தனவன் ஆண்டியுரு கண்டுருகும் நிலையிலன்றோ?

ஏனென்ற கேள்விதனை இளமழலை கேட்கையிலே
தேனென்ற சுவை இனிக்கும் செவிநிறைக்கும் பரவசமாய்!

எதிர்பார்க்கும் ஆய்வுகளில் 'ஏன்'களால் வளர்ச்சியுறும்
எதிர்பாரா ஈகையியினில் 'ஏன்'களே உயர்வுபெறும்!

தத்துவ விசாரங்கள் சந்தேகம் எழுகின்ற
வித்துவ மேதமையில் விரிந்துயர்ந்த அறிவியலில்

சத்துவத் தவநெறியில் சழக்கிடும் வாதமதில்
நித்தியக் காட்சியினில் நெகிழ்மன சாட்சியினில்

கோபத்தின் வேகத்தில் குமுறுகின்ற துக்கத்தில்
தாபத்தில் தீர்க்கவொணாச் சதிபுரியும் விதியதனில்

இளமையின் நாதத்தில் எழுகின்ற கீதத்தில்
விளைகின்ற மனலயத்தில் தெறித்துவிழும் 'ஏன்'களே!

விளக்கிடும் இயற்கையில் விரைந்துசுழல் பருவங்களில்
உளத்தினில் எப்போதும் ஊடுருவும் 'ஏன்'தானே?

பயத்தினில் இயற்கையைப் பணிந்தவன் மனத்தில்'ஏன்'
வியந்திடப் புகுந்துடன் மிஞ்சிடவே சாதித்தான்!

இயற்கையின் நியதியில் இறைநீதிப் பேரிடரைச்
செயற்கரிய அறிவியலால் தவிர்க்கமுயல் சாதனங்கள்!

புதுமைக்கு மறுப்பில்லை புகுந்திருக்கும் உலகமயம்
எதுவரைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தெரியவில்லை!

நவயுகத்தில் வருகின்ற நாகரிக நடைமுறைகள்
தவபலமாம் பண்பாட்டை தாக்காமல் இருந்திடட்டும்!

January 11, 2010

செஞ்சடை ஈசா!

செஞ்சடை ஈசா! எந்தாய்!
சஞ்சல மாகிய பவமிகு தளையற உன்றன்
அஞ்சலெ னக்கரு ளென்றே
தஞ்சம தேயளி மலரிணை சாற்றிடு மனமே!

பவம் = பிறப்பு

January 6, 2010

சிவன் பூங்கழல் !


விதிவழி வலியது மருளாய்!
பதிசிவ னதுபூங் கழலடி பரவிடு மனமே!
நதிமதி யணிவார் சடையன்
சதிஉமை யொடுதரு நடமிது சததம் நிறைவே!

('கந்த பத்யம்'எனும் அமைப்பில் இப்பாடல் அமைந்தது. சிவசிவாவுக்கு நன்றி)

December 31, 2009

திருவாதிரை நன்னாள்!



ஆதிரைநன் நாள்தன்னில் ஆண்டவனை வேண்டிடுவோம்!
மேதினியில் தீங்குகளை வீழ்த்திடுவான்! - வேதியனுக்(கு)
அன்பினொடுத் தொண்டானோர் ஆக்கியபா மாலைகள்
கன்மவினைப் போக்கும் களிம்பு.

December 29, 2009

கலைஞர்களை வாழ்த்துவோம்!


கண்ணனுக்குத் தாசனவன் கற்பனையில் சொற்புனைவில்
...கவியுணரும் தத்துவத்தில் கவிவெல்லும்!
எண்ணமதில் நீங்காத இடம்பிடித்த வரலாறாய்
...எழுத்திலுயர் கல்கியைநாம் மறப்போமா ?
வண்ணமுறு சித்திரங்கள் வரைந்தஉயர் ஓவியர்கள்
...வாழ்கின்ற நாடிதென்று பெருமைகொள்வோம் !
தண்ணமுதத் தமிழ்பாடும் தண்டபாணித் தேசிகரின்
...செம்மைகுரல் பண்ணிசையில் மயங்கார்யார்!


December 20, 2009

சிவனைத் தொழுவாய்!


முந்தும் வல்வினை மூண்டிடும் வேளையில்
உந்து நற்பதம் உன்னுவை நெஞ்சமே!
விந்தை யாக விளையாடும் ஈசனாம்
எந்தை தேசனின் ஏகம்பம் ஏத்தவே!

பாச மாகிய பற்றதும் நீங்கிட
நேச னாமமே நெஞ்சினில் நின்றிட
வாச மேவுநல் மாலைகள் சூடிடும்
ஈச னாருறை ஏகம்பம் ஏத்தவே!

மாடு மேலமர் மாதுமை பங்கனின்
ஆடு வான்கழல் அண்டிடு நெஞ்சமே!
பாடும் பக்தரைப் பார்த்தருள் செய்குவான்
ஈடி லான் திரு ஏகம்பம் ஏத்தவே!

சோத னைமிகு துன்பில் நலிந்து
வேத னைதனில் வீழ்வ தறிகிலாய்!
போத னாம்தவப் புண்ணியன் பேர்சொலும்
ஏத மில்திரு ஏகம்பம் ஏத்தவே!

அம்மை பாகனாம் ஆடலில் வல்லவன்
வெம்மை யாம்வினை வீழ்ந்திடச் செய்பவன்
இம்மை வாழ்வினில் இன்னருள் நல்குவன்
எம்மை யன் திரு ஏகம்பம் ஏத்தவே!

December 18, 2009

தெய்வத் தமிழ்!

மீனாட்சித் தாயவள் மீதுயர்ந்த பிள்ளைதமிழ்
தேனார்செந் தமிழினில் தெய்வமகன் பாடுகின்றான்!
குமரகுரு பரர்பாடல் குழந்தைமீனாள் வந்துகேட்டாள்
அமுதமொழி கவிசுவைக்க அமர்ந்தாளே கொலுவினிலே!
அரசனின் முத்தாரம் அன்பனுக்கே அணிவித்தாள்!
பரவசமாய்க் குருபரனைப் பாரேத்தச் செய்தனளே!

தெய்வீகத் தமிழ்மொழியில் திருக்கதவம் தாள்திறக்கும்!
தேயாதபவுர்ணமியாய் தேசாகும் அமாவாசை!
மெய்யாக மனந்தோய்ந்து வண்டமிழில் சொல்லெடுத்தால்
செய்கின்ற செயலினுக்குத் தெய்வீகம் கைகொடுக்கும்!
தேவாரம் திருப்புகழ் திருஓங்கும் பிரபந்தம்
நாவார இசைத்திடுவோம் நம்பிக்கை கொண்டிடுவோம்!

கையில் விழுந்தகனி!

ஏழைப்பெண் அன்றளித்த எளியநெல்லிக் கனிமுனியால்
மாழைப்பொன் கனியான மகிமைபெறும் அறக்கனியாம்!
அரசனுக்கு அவ்வைதந்த அரியநெல்லிக் கனியன்பின்
வரமாக மக்களுயர் வாழ்வுக்கே உகந்தகனி!
புனிதவதி மனங்குளிரப் புண்ணியர்க்கு அளித்தகனி
வனிதையவள் பக்திக்கே வழங்குமுயர் மாங்கனியாம்!
நாவலென்னும் பழமரத்தில் நாடகமாய்ச் சுட்டகனி
ஆவலுடன் ஊதுகையில் அறிவுசொல்லும் அளிந்தகணி!
அன்னைதந்தை உலகெனவே ஆனைமுகன் பெற்றகனி
என்னதவம் செய்தடைந்தோம் எழில்பழனி அருள்கனியை!

December 13, 2009

மனதை வேண்டி 'சீட்டுக்கவி!'

(சந்தவசந்தக் குழுமத்தில் நடந்த 'சீட்டுக்கவி' என்னும் கவியரங்கில் கலந்து கொண்டு நான் எழுதிய கவிதைகள்.)

சிதாகாசம் மனமுனக்குள் சித்துவிளை யாடிடுமே!
நிதானத்தைப் பயிலுகின்ற நெறிதன்னை அளித்திடுவாய்!

இமயமாம் மலைகளிலும் இயற்கையிலும் தவசீலர்
அமையுமன உணர்வலைகள் அருள்செய்தத் தேசமிது!

வான்வெளியில் பறக்கின்ற வண்ணப் பறவைபோல்
நான் எண்ண வெளிபறக்க நத்திடுவேன் நல்மனமே!

மனமேநீ தோணி!யென்பேன் மக்களைக் கரைசேர்ப்பாய்!
மனமேநீ ஆழிய்!என்பேன் மந்திரமாம் உன்னொலியே!

மனமேநீ சக்தி!யென்பேன் வல்லமையே உழைப்பிலென்பாய்!
மனமேநீ! ஆலயம்! வரமாக இறைவருவான்!

மனமுன்னை வேண்டுகிறேன் வளம்பெருக வேண்டுமென்று
தனமொன்றே எண்ணமதாய்த் தடுமாறும் மானுடத்தைத்

தரமான நிலையாக்கு! தகவாகும் வலுவாக்கு!
உரமான உளமாக்கி உயர்வாக்கு! உனைக்கேட்டேன்

உன்னுள்ளில் ஒலிக்கின்ற உணர்வலைக்கு வண்ணமுண்டு!
வன்கண்ணும், வன்மமும் வன்மையும் வண்ணந்தான்!

உவகையும் சாந்தமும் உயர்த்திடும் வன்னமாம்!
தவமென்னும் சத்துவம் தருநிலையே உன்னதமாம்!

வளர்ச்சியில் பலநிலைகள் மனமேநீ! இருக்கின்றாய்!
தளர்ச்சியில் ஆறுதல் தந்தென்னைத் தாங்கிடுவாய்!

இளமையினில்,நடுவயதில்,இரங்கிடும் முதுமையில்
வளந்தரும் வாழ்வாக மனமேநீ! அமைந்திடுவாய்!

மனிதனுக்குள் உள்ளுணர்வாய் மனமுந்தன் சாட்சியுண்டு!
தனிமனித உயர்வினுக்கு சந்ததமும் கைகொடுப்பாய்!

மனிதனுக்கும் மனமுனக்கும் மாறாத போராட்டம்!
மனமிறுக்கம் மனமுளைச்சல் வரிசையாய் இவ்வுலகில்!

இன்றைய வாழ்க்கைமுறை இயங்குகின்ற வேகத்தில்
சென்றிடுமிந் நிலைமையினைத் தாங்கியருள்!ஓ!மனமே!

படிகின்ற மாசுகளைப் பக்குவமாய் நீக்கிவிட
முடிகின்ற விந்தையினை வரமாகக் கொடுமனமே!

கள்ளமின்றிக் கபடின்றிக் களங்கமில்லாப் பிள்ளைமனம்
வெள்ளையுள்ளச் சிரிப்பினிலே வியந்திறைவன் குடிபுகுவான்!

பிஞ்சு வயதினில் பிள்ளைமனம் தெய்வீகம்
அஞ்சும் ஆர்ப்பரிப்பில் அடங்காது வளர்ந்தமனம்!

கெஞ்சியுன்னைக் கேட்பதெல்லாம் கெடுதியில்லா நன்றினுக்கே!
தஞ்சமென்பேன்! இறையுணர்வில் தளைத்திடவை! என்மனமே!

குழந்தைமனம் வேண்டுகிறேன்! கொண்டிடுநீ கருத்தினிலே!
வழங்கிடுவாய் இவ்வரத்தை மனமே நீ! வாழ்க!வாழ்க!


அன்புடன்,
தங்கமணி.